இடப்பிரச்னையில் துப்பாக்கி காட்டி மிரட்டிய கூலிப்படைத்தலைவன் கைது
கோவை; துாத்துக்குடி, நாடார் வீதியை சேர்ந்த தேவசகாயத்தின் மகன், காட்வின், 60. 1986ம் ஆண்டு நடந்த கொலை சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட இவரை போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்து வெளியில் வந்த இவர், தொடர்ந்து கொலை, ஆள்கடத்தலில் ஈடுபட்டார். நாளடைவில் கூலிப்படையின் தலைவனாக மாறிய இவர் மீது, எட்டு கொலை வழக்குகள் தவிர, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.2017ம் ஆண்டு தங்கநகைக்கடை உரிமையாளர், அவர் மனைவி உள்ளிட்டோரை துப்பாக்கி முனையில் கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்டார். இவர் மீது ஆயுதச்சட்டத்தின் கீழ் வழக்குகள் உள்ளன. தற்போது சென்னை அசோக் நகரில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன், கோவை வந்த இவர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடந்த இடப்பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும், அங்கிருந்தவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை தீவிரமாக கண்காணித்த ரத்தினபுரி போலீசார், நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து போதைப்பொருள் மெத்தாபீட்டமைன், 2.5 கிராம், பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.