உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம்--சத்தி புதிய ரயில் பாதை கைவிடப்பட்ட திட்டம் புத்துயிர் பெறுமா? ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம்--சத்தி புதிய ரயில் பாதை கைவிடப்பட்ட திட்டம் புத்துயிர் பெறுமா? ரயில் பயணிகள் எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம்-- - சத்தியமங்கலம் இடையே கடந்த 1999ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த திட்டம் ஆய்வு நிலையிலேயே கைவிடப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த எம்.பி.கள்., முயற்சி மேற்கொள்ள வேண்டும்.மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.கோவை -- மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில், சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. வாரம் ஒருமுறை திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில், இருமுறை துாத்துக்குடிக்கு ரயில் இயக்கப்படுகிறது. ஊட்டி மலை ரயிலும் இயக்கப்படுகிறது.மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ரூ.14.8 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, கோவை-மேட்டுப்பாளையம் ரயில் பயணிகள் நலச்சங்க அமைப்பாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் இடையே புதிய ரயில் பாதை் அமைத்து, அதன் வழியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ரயில் இயக்க கடந்த 1999ம் ஆண்டே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வழியாக ரயில் தடம் அமைக்க ஆய்வும் முதல் கட்டமாக தொடங்கப்பட்டது. அதன் பின் இத்திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் இடையே ரயில் பாதை அமைத்தால் அங்கிருந்து கர்நாடக மாநிலம் செல்ல முடியும். மைசூரு, பெங்களூரு சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் வரவும் வாய்ப்புள்ளது. மேட்டுப்பாளையம்- - சத்தியமங்கலம் இடையே புதிய ரயில் பாதை உருவாக்கினால் மேட்டுப்பாளையத்தில் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில்வளம் பெருகும். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து ரயில் நல பயணிகள் சங்கம் கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த செயலாளர் மோகன் கூறுகையில், ''மேட்டுப்பாளையத்திற்கு வரும் ரயில்கள் அங்கு ரயில் பாதை முடிவதால், மீண்டும் கோவை ரயில் நிலையம் வந்து தான் செல்ல வேண்டும்.மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் இருந்து புதிய ரயில் பாதை சத்தியமங்கலத்திற்கு உருவாக்கினால், மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் ஜங்சனாக அந்தஸ்து உயரும். நுாற்றாண்டு பழமையான ரயில்நிலையம் மேலும் உயர்ந்த நிலைக்கு செல்லும்,'' என்றார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை