உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழை வந்தாலே பதறி விடுகின்றனர் எம்.ஜி.ஆர்.,மார்க்கெட் வியாபாரிகள்

மழை வந்தாலே பதறி விடுகின்றனர் எம்.ஜி.ஆர்.,மார்க்கெட் வியாபாரிகள்

கோவை; கோவையில் மழை பெய்தால், விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைவர். ஆனால், 'அய்யோ மழை வந்து விட்டதே...பொழப்பு போச்சே' என கவலைப்படுகின்றனர், மேட்டுப்பாளையம் சாலை எம்.ஜி.ஆர்., மார்க்கெட் வியாபாரிகள்.கோவை ராஜவீதியிலுள்ள டி.கே.மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய முடியாத சூழலில், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 25 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர்.மார்க்கெட் உருவாக்கப்பட்டது. அப்போதே தாழ்வான பகுதியாக இருந்தபோதும், உயர்த்தாமல் அப்படியே பயன்பாட்டுக்கு கொடுத்தது மாநகராட்சி. அதன் பிறகு எவ்வித பராமரிப்பும், வசதியும் செய்து கொடுக்கவில்லை.இதனால் இங்கு, மழை காலங்களில் வெள்ளம் தேங்கிவிடுகிறது. வியாபாரிகள் கடும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இருப்பு வைக்கப்படும் காய்கறி அனைத்தும் நனைந்து அழுகிவிடுகிறது. மார்க்கெட்டினுள் கான்கிரீட் சாலை அமைத்துக்கொடுக்கவும், சாலையிலிருந்து வரும் தண்ணீர் உள்ளே செல்லாமல் தடுப்பு அமைக்கவும், மார்க்கெட்டினுள் தேங்கும் மழை நீர் வெளியேற, மழைநீர் வடிகால் ஏற்படுத்திக்கொடுக்கவும், வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். மாநகராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் வியாபாரிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். நேற்று முன் தினம் பெய்த மழையில், மார்க்கெட் வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. பதைபதைத்து போயினர் வியாபாரிகள்.அவர்கள் கூறுகையில், 'மழை பெய்தாலே எங்களுக்கு பயம் தான். மரச்சட்டங்களை அமைத்து அதற்கு மேலே காய்கறியை அடுக்கி வைத்திருக்கிறோம். ஒரு மணி நேரம் மழை பெய்தால், மொத்த காய்கறியும் மூழ்கிவிடுகிறது வெங்காயம் மூழ்கினால் அதை விற்க முடியாது. மொத்தமும் நஷ்டமாகிவிடும். எங்களது நிலையை மாநகராட்சி அதிகாரிகள் புரிந்து கொள்வதில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ