விதிமுறை மீறிய இயங்கிய மூன்று கிரஷர்களுக்கு சீல்; கனிமவளம், வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி
கோவை,; கோவை மாவட்டத்தில் கனிமவளத்துறை விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்ட மூன்று கிரஷர்களுக்கு கனிமவளம், வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரியில், 450 அடி ஆழ கல்குவாரியில், பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில், ஐந்து பேர் உயிழந்த சோக சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுக்க உள்ள தனியார் கல்குவாரிகளை ஆய்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, கோவை மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமையிலான கனிமவளத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று, கிணத்துக்கடவு தாலுகாவுக்குட்பட்ட பனப்பட்டி கிராமம், சாரதி ப்ளூ மெட்டல், அரசம்பாளையத்திலுள்ள ஆதி ப்ளூ மெட்டல் மற்றும் பாலகிருஷ்ணன் ப்ளூ மெட்டல் ஆகிய, ஜல்லி கிஷர்களை நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இவை, தமிழ்நாடு அரசு கனிமவள விதிகள், 2011 கீழ் பதிவு செய்யப்படாத ஜல்லி கிரஷர்கள் என தெரியவந்தது. பாதுகாப்பற்ற முறையில் குவாரிகளோ, கிரஷர்களோ செயல்படக்கூடாது என்று எச்சரித்து, அவற்றிற்கு சீல் வைத்தனர். இது குறித்து, கனிமவளத்துறையினர் கூறுகையில், 'கலெக்டர் உத்தரவுபடி வருவாய்த்துறை, கனிமவளத்துறை இணைந்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசின் கனிமவள விதிமுறைகளின் கீழ் சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, கிரஷர்களை இயக்க முடியும். தவறும் பட்சத்தில் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்வோம்'' என்றனர்.