பால் தரம் குறைந்தால் கடும் நடவடிக்கை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை
தொண்டாமுத்தூர் : பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில், ஆய்வு செய்தபோது, பாலின் தரத்தில் ஒருபோதும் சமரசம் இருக்க கூடாது. தரம் குறைந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பணியாளர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.கோவையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று கோவை வந்திருந்தார். இந்நிலையில், பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில், அமைச்சர் ஆய்வு செய்தார். பாலின் தரத்தை ஆய்வு செய்யும் ஆய்வகம், புதியதாக திறக்கப்பட்ட பன்னீர் தயாரிக்கும் பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது, தர ஆய்வகத்தில், பாலின் தரத்தில் பல்வேறு கருத்துக்கள் வருகிறது. பாலின் தரத்தில் ஒருபோதும் சமரசம் இருக்க கூடாது. பாலின் தரம் குறைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, பால் கூட்டுறவு சங்கத்தினர், சம்பளம் உயர்வு செய்யவேண்டும் என, மனு அளித்தனர். அவர்களிடம், உங்களுக்கு வேண்டியதை நான் செய்கிறேன். அதேபோல, நீங்கள் மாதந்தோறும், அதிக பாலை தர வேண்டும். தீவனங்கள் விற்பனை சரிவர செய்வதில்லை. தீவன விற்பனையை அதிகரிக்க வேண்டும் எனக்கூறினார்.
கட்டுப்படுத்த அதிகாரமில்லை'
பன்னீர் மற்றும் பன்னீரால் தயாரிக்கப்படும் ஆவின் உபபொருட்களை விற்பனை செய்வதற்கான 'பன்னீர் ஹட்' கோவையில் திறந்து வைத்து, நிருபர்களிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ''ஆவின் நிறுவனத்தில் நாளொன்றுக்கு, 35 லட்சம் லிட்டர் பால் கையாளப்படுகிறது. சின்ன சின்ன குறைகள் இருப்பது உண்டு. அவற்றை களைய 'வாட்ஸ் அப்' குழு துவங்கப்பட்டுள்ளது; பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் சரி செய்யப்படுகின்றன. பால் உற்பத்தி ஓரிரு மாதங்களில், 40 லட்சம் லிட்டராக உயரும். தனியார் நிறுவனங் கள் பால் விலையை உயர்த்தி விட்டன; அதை கட்டுப்படுத்த எங்களிடம் அதிகாரம் இல்லை. ஆண்டு முழுவதும் ஆவினில் சீரான விலையே நீடிக்கிறது,'' என்றார்.