முதியவரிடம் பணம் மோசடி
கோவை; கோவை கே.சி., தோட்டம் சாமி அய்யர் புது வீதியை சேர்ந்தவர் முருகேசன், 62. இவர் கடந்த, 22ம் தேதி ஒப்பணக்கார வீதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு மொபட்டில் வந்த ஒருவரிடம் ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து தரும்படி உதவி கேட்டார்.அந்த நபரும் உதவுவதாக கூறி முருகேசனிடம் இருந்து ஏ.டி.எம்., கார்டை வாங்கினார். அவரிடம், முருகேசன் பின் நம்பரை கூறி ரூ.35 ஆயிரத்தை எடுத்து தருமாறு கேட்டார். அந்த நபர் ஏ.டி.எம்., மில் இருந்து ரூ.35 ஆயிரத்தை எடுத்து அதை முருகேசனுக்கு தெரியாமல் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்தார்.அதன் பின் முருகேசனிடம், அந்த நபர் ஏ.டி.எம்.,மில் பணம் இல்லை என்றும், அருகே உள்ள வேறு ஏ.டி.எம்., மையத்துக்கு செல்லும் படியும் கூறி அங்கிருந்து சென்றார். முருகேசன் அருகே இருந்த ஏ.டி.எம்.,மையத்துக்கு சென்ற போது தனது கையில் இருந்த ஏ.டி.எம்., கார்டை பார்த்தார்.அதில் அந்த கார்டு அவருடையது இல்லை என்றும், வேறு கார்டை கொடுத்து விட்டு அந்த நபர் தப்பி சென்றதும் தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகேசன் வங்கி கிளைக்கு சென்று தனது வங்கி இருப்பு விவரங்களை சரிபார்த்தார். அதில்அந்த நபர் ரூ.35 ஆயிரத்தை எடுத்து கொண்டு தப்பியது தெரியவந்தது.இதுகுறித்து வெறைட்டிஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.