பருவமழை துவங்கப்போகுது அணைகளில் கண்காணிப்பு
வால்பாறை;தென்மேற்கு பருவமழை விடைபெறவுள்ள நிலையில் வரும், 16ல் வடகிழக்குப் பருவமழை துவங்குகிறது. மழை நீரை சேமிக்கும் வகையில் பரம்பிக்குளம் பாசன திட்டத்தின் கீழ், வால்பாறையில் மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, காடம்பாறை, மேல்ஆழியாறு ஆகிய ஐந்து அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் பருவமழையின் போது, சோலையாறு அணை நிரம்பியதும், சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கும், மேல்ஆழியாறு அணை வழியாக ஆழியாறு அணைக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், தென்மேற்குப்பருவ மழை விடைபெறவுள்ள நிலையில் வரும், 16ம் தேதி வடகிழக்குப் பருவமழை துவங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வால்பாறையில் தற்போது சாரல்மழை மட்டுமே பெய்கிறது. 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 157.59 அடியாக காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 254 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 453 கனஅடி தண்ணீர் வீதம் வெளியேற்றப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து அளவை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.