வரி, மின் கட்டணம் குறைக்க எம்.எஸ்.எம்.இ., வலியுறுத்தல்
கோவை; கோவை எம்.எஸ்.எம்.இ., அசோசியேஷன் சார்பில், கருத்தரங்கு மற்றும் முதலாவது பொதுக்குழு கூட்டம், கோ-இண்டியா அரங்கில் நடந்தது. எம்.எஸ்.எம்.இ., அசோசியேஷன் தலைவர் மணி தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய இயக்குனர் சண்முக சிவா, வணிக வரி ஆலோசகர் ராஜேந்திரன், கோவை கம்ப்ரஸர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஜாப் ஒர்க்ஸ் செய்யும் சிறு, குறு நிறுவனங்களுக்கு, 18 சதவீதம் என்ற அளவில் உள்ள ஜி.எஸ்.டி.யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். நெருக்கடியான சூழலுக்கு மத்தியில் தொழில் செய்து வரும் சிறு, குறு நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை, தமிழக அரசு குறைக்க வேண்டும். கடனுக்கு மாதத்தவணை செலுத்த தாமதமாகும்போது, சிபில் ஸ்கோர் குறைகிறது. இதனால் சிறு, குறு நிறுவனங்கள் அவசர தேவைக்காக கடன் பெறுவதில் பெரும் சிரமம் உள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு சிபில் ஸ்கோரில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் தொழில் வரி மற்றும் குப்பை வரி அதிகம் வசூலிக்கப்படுவதால், சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தொழில் மற்றும் குப்பை வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக மணி, செயலாளராக பாண்டியன், பொருளாளராக சக்திவேல் உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிர்வாக குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.