நல்லமுடி ரோடு மோசம்; சுற்றுலா பயணியர் தவிப்பு
வால்பாறை; நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனையில் அடிப்படை வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை நகரிலிருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனைப்பகுதிக்கு சுற்றுலா பயணியர் செல்ல, வனத்துறை சார்பில் ஒரு நபருக்கு, 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, நல்லமுடி காட்சிமுனை செல்லும் ரோடு, குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுற்றுலா பயணியர் கூறியதாவது: ஊட்டி, கொடைக்கானலையடுத்து வால்பாறைக்கு அதிக அளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். நல்லமுடி காட்சி முனை பகுதிக்கு நடந்து செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. சுற்றுலா பயணியரிடம் கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் வனத்துறையினர், போதிய அடிப்படை வசதிகள் செய்து தருவதில் தயக்கம் காட்டுகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில், ரோட்டை சீரமைத்து, கழிப்பிட வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதே போல், ஆனைமுடி பிரிவிலிருந்து நல்லமுடி பூஞ்சோலை வரை செல்லும் ரோட்டை நகராட்சி சார்பில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.