உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொள்ளாச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 905 வழக்குகள் சமரச தீர்வு

பொள்ளாச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 905 வழக்குகள் சமரச தீர்வு

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 2,191 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 905 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 6.70 கோடி ரூபாய்க்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி சப் - கோர்ட்டில், வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் (தேசிய லோக் அதலாத்) நடந்தது. மாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். சார்பு நீதிபதி மணிகண்டன் தலைமை வகித்தார். குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1, மாஜிஸ்திரேட் சரவணக்குமார், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுஜாதா, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2, மாஜிஸ்திரேட் பிரகாசம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஸ்ரீநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சங்கத் தலைவர் துரை, வக்கீல்கள் பலர் பங்கேற்றனர். இதில், சப் - கோர்ட், மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் முதன்மை உரிமையியல் நீதிமன்றம், ஜே.எம்., 1 மற்றும் 2 கோர்ட்டுகளில் உள்ள மோட்டார் வாகன விபத்துகள், செக் மோசடி, உணவு கலப்பட வழக்குகள், மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிரான வழக்குகள், ஜீவானம்சம், விபத்து காப்பீடு வழக்கு என பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. மொத்தம், 2,191 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 905 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மொத்தம், ஆறு கோடியே, 70 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய்க்கு இழப்பீடு சமரசம் செய்யப்பட்டதாக வட்ட சட்டப்பணிகள் குழுவினர் தெரிவித்தனர். வால்பாறை வால்பாறை நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சிக்கு, மாஜிஸ்திரேட் மீனாட்சி தலைமை வகித்தார். வக்கீல்கள் பெருமாள், சிவசுப்பிரமணியம், சட்ட பணிகள் குழு உறுப்பினர் வக்கீல் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை, சில்லிங் விற்பனை, பொது இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட, 61 வழக்குகளுக்கு, 93,600 ரூபாய் அபராதமாக விதிக்கபட்டது. வால்பாறை பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றில் கல்விக்கடன் பெற்ற, 60 பேருக்கு, 42,40,891 ரூபாய்க்கு வங்கியின் வாயிலாக நோட்டீஸ் அனுப்பட்டது. இதில் 9 பேர் வாங்கிய மொத்த கடன், 42,40,891 ரூபாயில், 30,88,891 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள தொகை 11,52,000 ரூபாய் மூன்று மாத தவணையில் மேற்படி தொகையை கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதில், 1,49,000 பணமாக வசூலிக்கபட்டது. வால்பாறை நீதிமன்றத்தில் லோக் அதலாத் வாயிலாக, 30,88,891 ரூபாய் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, இதுவே முதன் முறையாகும். நிகழ்ச்சியில், வக்கீல்கள் முருகன், முத்துசாமி, பால்பாண்டி, வினோத்குமார், சுமதி, முத்துகிருஷ்ணம்மாள், சட்டம் சார்ந்த தன்னார்வலர்கள் சுரேஷ், முனியாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ