அன்னுார், மேட்டுப்பாளையத்தில் தேசிய வாக்காளர் தின பேரணி
அன்னுார்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சர்க்கார் சாமக்குளத்தில் நேற்று, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஸ் ஸ்டாண்டில், பேரணியை அன்னூர் தாசில்தார் குமரி அனந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.சத்தி ரோடு வழியாக, இரண்டு கி.மீ., தூரம் சென்று, கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பேரணி முடிவடைந்தது.இதில் தேர்தல் துணை தாசில்தார் ரேவதி, ஆதித்யா பொறியியல் கல்லூரி, ஏசியன் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் வாக்காளர்கள் பங்கேற்றனர்.தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. கைகளில் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியபடி, மாணவ மாணவியர் பேரணியில் பங்கேற்றனர். மேட்டுப்பாளையத்தில்...
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பேரணி நடந்தது. தேர்தல் பிரிவு தனி தாசில்தார் பாலமுருகன் துவக்கி வைத்தார். பேரணியில், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர், வருவாய்துறையினர் பங்கேற்றனர்.'உன் வாக்கு; உன் எதிர்காலம்', 'வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை', 'வாக்குரிமை எனது நாட்டுரிமை' ஆகிய கோஷங்கள் பேரணியில் எழுப்பப்பட்டன.பேரணி இறுதியில் மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் தனசீலன் நன்றி கூறினார்.