வேளாண் தகவல்களை உள்ளடக்கி புது செயலி; பல்கலை துணைவேந்தர் தகவல்
கோவை; ''வேளாண் தகவல்களை உள்ளடக்கி மொபைல் செயலி விரைவில் வெளியிடப்படும்” என, வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.கோவை, வேளாண் பல்கலை, திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியில் பயின்றவர்களுக்கு, பட்டமளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில், ஆஸி., மெல்போர்ன் பல்கலையின் துணை, துணைவேந்தர் முத்துப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசுகையில், “இந்திய அரசுடன் இணைந்து, மெல்போர்ன் பல்கலை பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், குறிப்பாக தமிழகத்தில்,19 துறை சார்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வேளாண் கல்வி, ஆராய்ச்சி சார்ந்து, கோவை வேளாண் பல்கலை தலைமையில் கூட்டு முயற்சிகள் நடைபெறவுள்ளன” என்றார்.பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி தலைமை வகித்துப் பேசியதாவது:எந்தவொரு தேவைக்கும் விவசாயிகள் உடனடியாக அணுகுவது, அருகிலுள்ள இடுபொருள் விற்பனையாளரைத்தான். எனவே, அவர்கள் சரியான ரகம், விதை, இடுபொருள், பூச்சி, நோய்க்கான மருந்துகளை அறிந்து விற்பனை செய்ய வேண்டும்.வேளாண் பல்கலை ஒருபோதும் தவறான விதைகளை பரிந்துரை செய்யாது. வேளாண் இடுபொருள் சார்ந்து விரிவான கையேட்டை பல்கலை விரைவில் வெளியிடும்.மேலும், அந்தந்தப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பிரதான பயிர்கள் குறித்த முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில், விதைப்பு முதல் அறுவடை வரையிலான அனைத்துத் தகவல்களும் அடங்கிய செயலி (ஆப்) விரைவில் உருவாக்கி வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், படிப்பை நிறைவு செய்த, 700 பேருக்கு 'வேளாண் இடுபொருள்' ஓராண்டு பட்டயப் படிப்பு சான்றும், 80 பேருக்கு பிற துறைகள் சார்ந்த பட்டயப்படிப்புக்கான சான்றுகளும் வழங்கப்பட்டன.திறந்தநிலை மற்றும் தொலைதூர கல்வி இயக்குநர் பாலசுப்பிரமணியம், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்பிரமணி, பதிவாளர் தமிழ்வேந்தன், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.