உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சப்பள்ளி பிரிவில் புதிய பஸ் ஸ்டாப்

கஞ்சப்பள்ளி பிரிவில் புதிய பஸ் ஸ்டாப்

அன்னுார், ; கஞ்சப்பள்ளி பிரிவை பஸ் நிறுத்தமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அறிவித்துள்ளது. அன்னுார்--அவிநாசி சாலையில் கஞ்சப்பள்ளி பிரிவு முக்கிய சந்திப்பாக உள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் இங்கு வந்து பஸ் ஏறி செல்கின்றனர். எனினும் சில பஸ்கள் மட்டுமே இங்கே நிறுத்தப்படுகின்றன. பெரும்பாலான பஸ்கள் நிறுத்துவதில்லை. இதுகுறித்து உழவர் விவாத குழு அமைப்பாளர் சுக்ரமணி கவுண்டன் புதூர் ரங்கசாமி, விவசாயிகள் முறையீட்டு கூட்டத்தில் புகார் மனு அளித்தார். இதையடுத்து, மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சத்தியகுமார், அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : அன்னுாரில் இருந்து ஐந்தாவது கி.மீ., தொலைவில் உள்ள கஞ்சப்பள்ளி பிரிவில் பஸ் ஸ்டாப் அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் பஸ்கள், மேட்டுப்பாளையம்-திருப்பூர் வழித்தடத்தில் செல்லும்போது கஞ்சப்பள்ளி பிரிவு பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும், என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார். பஸ் ஸ்டாப் அறிவிக்கப்பட்டதற்கு கஞ்சப்பள்ளி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !