கோவையின் புதிய கலெக்டர் பவன்!
கோவை: கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையின் புதிய கலெக்டராக, சென்னையில் தமிழக அரசின் தலைமை செயலர் அலுலகத்தில் தனி அதிகாரியாக பணியாற்றும் பவன்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காவேரி மாவட்டத்தை சேர்ந்தவர். பெங்களூருவில் பி.இ.எஸ்., பல்கலையில் இன்ஜினியரிங்கில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் படித்திருக்கிறார். 2016ல் ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் பணியில் சேர்ந்தார்.கடந்த, 2017-18ல் திருவள்ளூர் மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்றார். 2018ல் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையில் உதவி செயலாளராக இருந்தார். 2018 செப்., முதல், 2019 பிப்., வரை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சப்-கலெக்டராக பணியாற்றினார். 2019 முதல், 2021 ஜூன் வரை தாராபுரம் சப்-கலெக்டர், 2021 முதல், 2023 பிப்., வரை கடலுார் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், 2023 பிப்., முதல், 2024 அக்., வரை திருப்பூர் மாநகராட்சி கமிஷனர், 2024 அக்., முதல் தற்போது வரை தலைமை செயலர் அலுவலகத்தில் தனி அதிகாரியாக பணியாற்றி வந்தார். தமிழில் நன்கு பேசும் திறன் கொண்டவர் என்பதால், பொதுமக்கள் சந்தித்து குறைகளை சொல்லும்போது, புரிதல் பிரச்னை எழாது.கோவையில் இருந்து ஒரே நேரத்தில் 3 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
கோவை கலெக்டராக, 2023 ஜன., 30 முதல், 2025 பிப்., 9 வரை கிராந்திகுமார், இரண்டு ஆண்டுகள் மற்றும், 10 நாட்கள் பணியில் இருந்திருக்கிறார். தற்போது சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்வேதாவுக்கு பதிலாக, பொன்னேரியில் சப்-கலெக்டராக பணிபுரிந்த சங்கத் பல்வநவாகே நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி சப்-கலெக்டராக பணிபுரிந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கேத்தரின் சரண்யா, தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.கோவையில் இருந்து ஒரே நேரத்தில் மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இது, கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.