உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் புது சிக்கல்!: சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நிறுத்தம்

விமான நிலைய விரிவாக்க திட்டத்தில் புது சிக்கல்!: சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நிறுத்தம்

கோவை: 2010ல் இருந்து கோவை மக்கள் பேசிக் கொண்டிருக்கும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கி விட்டது. அடிக்கல் நட்டு பணியை துவக்க வேண்டிய நேரத்தில், சுற்றுச்சுவர் கட்ட முடியாமல், சிக்கலான சூழல் உருவாகி வருகிறது. இதில், என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பதை பட்டியலிட்டு, மாவட்ட நிர்வாகம், நில எடுப்பு பிரிவினர், விமான நிலைய ஆணையத்தினர், நில உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் அமர்ந்து பேசி, நிவர்த்தி காண வேண்டும். இதற்கு தமிழக அரசு விரைந்து தீர்வு ஏற்படுத்தினால் மட்டுமே, விமான நிலைய விரிவாக்கம் அடுத்த கட்டத்துக்கு நகரும். விரிவாக்கம், 2010ல் அறிவிக்கப்பட்டது; 2026ல் இருக்கிறோம். இன்னும் நடக்கவில்லை. இடையூறுகளுக்கு மத்தியில் தமிழக அரசு ரூ.2,300 கோடி இழப்பீடு கொடுத்து நிலம் கையகப்படுத்தி தந்தது. அதன் எல்லையை அடையாளம் கண்டு, சுற்றுச்சுவர் கட்டுவதற்கான வேலையை ஆணையம் செய்து வருகிறது. விரிவாக்கத்துக்கு நிதியை மத்திய அரசு ஒதுக்கி விட்டது. ஓராண்டுக்குள் சுற்றுச்சுவர் கட்டி முடிக்க கெடு விதித்துள்ளது. அதன்பின், அடிக்கல் நட்டு, விரிவாக்க பணியை துவக்க ஆணையம் முடிவு செய்திருக்கிறது. கான்கிரீட் கட்டுமானங்கள் தயாராக உள்ளன. நிலத்தை அளவீடு செய்து, சுற்றுச்சுவர் செல்லும் வழித்தடத்தில் மஞ்சள் நிற எல்லைக்கற்கள் நடப்பட்டன. கான்கிரீட் கட்டுமானங்களை வைப்பதற்கு குழி தோண்டிய போதே, அங்கு வசிப்போருக்கு, தங்களது நிலம் எந்தளவுக்கு எடுக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது. சுற்றுச்சுவரை ஒட்டி வசிக்கும் விவசாயிகள், குடியிருப்புவாசிகள், தொழில்துறையினர் செல்வதற்கு வழித்தடம் இல்லாததால், குழி தோண்டும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்தவர்கள் கூறியதாவது: சின்னியம்பாளையத்தில் இருந்து இருகூர் செல்லும் வழியை மறித்து சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. அவிநாசி ரோட்டுக்கு வர பாதை இல்லை. சுற்றுச்சுவரை ஒட்டி, 200 அடி அகலத்துக்கு விமான நிலைய பயன்பாட்டுக்கு புது ரோடு போடப்படும். அதில், 30 அடி ரோடு பொது பயன்பாட்டுக்கு வழங்க சொல்கிறோம். மக்களிடம் நிலம் வாங்கிதான் சுவர் கட்டப்படுகிறது. வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு கட்டினால் எப்படி? தள்ளி கட்ட வேண்டும் அல்லது கூடுதலாக நிலம் எடுத்து, சாலை போட வேண்டும். நிலத்தை முழுமையாக கொடுத்து விட்டு, வேறிடத்துக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம். சந்தை மதிப்புக்கு இழப்பீடு கொடுத்து விட்டு, எடுத்துக் கொள்ளட்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இன்னொரு பகுதியில், விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்ததுபோக, சிலருக்கு சிறிதளவே இடம் மிஞ்சியிருக்கிறது. அங்கு இனி விவசாயம் செய்ய வழியில்லை. கட்டடம் கட்டி வாடகைக்கு கொடுக்கலாம் அல்லது வீடு கட்டலாம். ஆனால் அரசு துறைகளில் வரைபட அனுமதி பெற, கட்டுமான விதிமுறைப்படி, 10 மீட்டர் அகலத்துக்கு சாலை வசதி தேவை. போக்குவரத்துக்கு வழியே இல்லை என்பதால், போராட்ட களத்துக்கு மக்கள் வந்துள்ளனர். சுற்றுச்சுவர் வழித்தடத்தில் பிரச்னைகள் பலவிதமாக வருகின்றன. அரசியல் இருப்பதாக தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம், நில எடுப்பு பிரிவினர், விமான நிலைய அதிகாரிகள், நில உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் அமர்ந்து, ஒவ்வொரு பிரச்னைக்கும் பேசி, தீர்வு காண வேண்டும். இல்லையெனில், விரிவாக்கம் இப்போதைக்கு நடக்காது என தொழில்துறையினர் கவலைப்படுகின்றனர்.

'தமிழக அரசு தலையீடு அவசியம்'

தொழில் துறையினர் கூறுகையில், 'தமிழகத்தின் 2வது பெரிய நகரம் கோவை என பெருமையாக பேசுகிறோம். ஏர்போர்ட் விரிவாக்கம் 16 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருக்கிறது; சின்ன சின்ன பிரச்னைகளால் தடங்கல். இன்னும் சில இடங்களில் நிலம் எடுத்து தரவில்லை. சில பகுதியில் இடத்தை ஆணையம் விட்டுக் கொடுக்க வேண்டும். விரைந்து தீர்வு காண தமிழக அரசு தலையிட வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sridhar Venkadesan
ஜூன் 16, 2026 15:09

அரசு கவனம் செலுத்த வேண்டும்


V GOPALAN
ஜூன் 16, 2026 11:39

From Trichy to Tanjore it is hardly 35 to 40 km. But we are going for two airports. Simple shuttle train service is sufficient from trichy to tanjore Thurai Vaiko only can sensibly think about this.


GOPALAN
ஜூன் 16, 2026 08:32

Better late than never. it is high time the AAI should look for an all together new green field airport outside city limits and the expansion of airport at the present location as it is not ideal for operation of wide body aircrafts with several houses, schools, colleges and hospitals in close proximity.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை