உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு வரி செலுத்த முடியாததால் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் அவலம்: புதிதாக வீடு கட்டியவர்கள் பரிதாப நிலை

வீட்டு வரி செலுத்த முடியாததால் கூடுதல் மின் கட்டணம் செலுத்தும் அவலம்: புதிதாக வீடு கட்டியவர்கள் பரிதாப நிலை

அன்னுார்: வீட்டு வரி செலுத்த முடியாமல், இரண்டு மாதங்களாக கிராம மக்கள் தவிக்கின்றனர். இதனால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது என்று புதிதாக வீடு கட்டியவர்கள் புலம்புகின்றனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையம், காரே கவுண்டன்பாளையம், குன்னத்தூர், ஒட்டர்பாளையம், காட்டம்பட்டி உள்ளிட்ட 21 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், பொதுமக்களிடம், வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, லைசன்ஸ் கட்டணம் ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் வீட்டு வரி செலுத்த முடியவில்லை என புகார் எழுந்துள்ளது.இது குறித்து கிராமமக்கள் கூறுகையில்,'2025--26ம் ஆண்டுக்கானவீட்டு வரி, குடிநீர் கட்ட ணம் செலுத்த முடியவில்லை. இதுபற்றி ஊராட்சி அலுவலகத்தில் கேட்டால் இரண்டு மாதங்களாக சர்வர் மேம்படுத்தப்படவில்லை. எனவே, இந்த நிதியாண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம் பெற முடியவில்லை என்று கூறுகின்றனர். புதிதாக வீடு கட்டி முடித்துள்ளோர் தற்காலிக மின் இணைப்பில் ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் என அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர். வீட்டு வரி நிர்ணயிக்கப்பட்டு, விதிக்கப்பட்டால், அதை மின்வாரிய அலுவலகத்தில் சமர்ப்பித்து வீட்டுக்கான மின் கட்டணமான யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.முதல் நூறு யூனிட் இலவசமாக கிடைக்கும். கட்டி முடிக்கப்பட்ட வீட்டின், வரி ரசீதை சமர்ப்பித்தால் தான் அடமான கடன் பெற முடியும். வீட்டுக் கடனின் கடைசி தவணை பெற முடியும். இதற்காக ஊராட்சி அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களாக நடையாய் நடக்கிறோம். ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளோம்.எனினும் மாவட்டம் முழுவதும் இந்த நிலை உள்ளது. சர்வர் மேம்படுத்தப்பட்ட பிறகே இந்த நிதி ஆண்டுக்கான வீட்டு வரி, குடிநீர் கட்டணம் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை