உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர்கள் மனு

தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்; நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர்கள் மனு

வால்பாறை; வால்பாறை நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும், என, நகராட்சி கமிஷனரிடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர்.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இதில் 19 வார்டுகளில் தி.மு.க.,வும், அ.தி.மு.க., வி.சி., தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த அழகுசுந்தரவள்ளி உள்ளார். துணைத்தலைவராக செந்தில்குமார் உள்ளார்.கடந்த சில மாதங்களாகவே, நகராட்சி தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் மோதல் இருந்து வருகிறது.கவுன்சில் கூட்டங்களில், தி.மு.க., கவுன்சிலர்கள் பேசும் போது, வளர்ச்சி பணிகளில் முறைகேடு நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டி பேசுகின்றனர். மேலும், கடந்த மூன்று முறை கவுன்சிலர்கள் எதிர்ப்பால் மன்றக்கூட்டமும் நடைபெறவில்லை.இந்நிலையில், வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் செல்வக்குமார், ரவிசந்திரன், மகுடீஸ்வரன், அன்பரசன், பால்சாமி, வீரமணி ஆகியோர் நகராட்சி கமிஷனர்(பொ) கணேசனிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில், 'வால்பாறை நகராட்சியில் வளர்ச்சி பணி என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. நகராட்சி தலைவர் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளார். வளர்ச்சிப்பணிகள் என்ற பெயரில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.வால்பாறை நகராட்சியில் மக்கள் வரிப்பணம் மீண்டும் கொள்ளை போவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்,' என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ