பார்க்கிங் வசதி இல்லை; சுற்றுலா பயணியர் தவிப்பு
வால்பாறை; வால்பாறையில், பார்க்கிங் வசதி இல்லாததால், சுற்றுலா பயணியர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.கோடை விடுமுறையை வால்பாறையில் மகிழ்ச்சியாக கொண்டாடவும், இங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.சுற்றுலா பயணியர், தங்களது வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதி இல்லாததால், ரோட்டிலேயே நிறுத்தி செல்கின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சுற்றுலா பயணியர் கூறுகையில், 'ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களை போல, வால்பாறையை கண்டு ரசிக்க ஆர்வமாக வருகிறோம். சுற்றுலா பயணியரின் வாகனங்கள் நிறுத்த, நகராட்சி சார்பில், 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும்.அதே போல், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும்,' என்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சட்டசபையில் அமைச்சர் அறிவித்த படி, வால்பாறை நகர் அண்ணாதிடலில், 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய ஸ்டேடியம் விரைவில் அமைக்கப்படும். அதன்பின், சுற்றுலா பயணியர் வாகனங்கள் நிறுத்துவதில் எந்த பிரச்னையும் இருக்காது,' என்றனர்.