வேளாண் காடுகள் திட்டத்தில் நாற்றங்கால்! 50 சதவீதம் மானியத்தில் அமைக்கலாம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கான நாற்றங்கால் அமைக்க மானிய திட்டம் வரப்பெற்றுள்ளது. பொள்ளாச்சி தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி அறிக்கை: பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் பிரதமரின் ராஷ்டிரியா கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 2025 - 26ம் நிதியாண்டில், வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்கான நாற்றங்கால் அமைக்க மானியத்திட்டம் வரப்பெற்றுள்ளது. வேளாண் காடுகள் என்பது ஒரு குறிப்பிட்ட விவசாயி நிலத்தில், வேளாண் பயிர்கள், மரங்கள், கால்நடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த முறையாகும். வேளாண் காடுகளால், இயற்கை காடுகள் அழிவது, மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மேலும், மண்ணிலிருந்து சத்துக்கள் நீக்கப்படுவது அதிக வேர் பிடிப்புகளால் தடுத்து நிறுத்தப்படுகிறது. மண்ணின் மேற்பரபரப்பு வெப்ப நிலை குறைக்கப்படுகிறது. மண்ணில் ஈரப்பதம் ஆவியாவது தடுக்கப்படுகிறது. மண் அமைப்பானது, அங்ககச்சத்துகள் அதிகரிப்பு காரணமாக மேம்பட்டு வளமடைகிறது. மேலும், மரப்பயிர்களை விவசாய நிலங்களில் வளர்ப்பதால், தச்சு வேலைகளுக்கான மரம் கிடைப்பதுடன், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. பொதுவாக வேளாண் காடுகள், சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்துக்கும், சமூகத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. விவசாய நிலங்களில் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கிறது.தற்போது வேளாண்மை துறை வாயிலாக, சிறு மற்றும் பெரிய உயர் தொழில்நுட்ப வேளாண் காடுகள், நாற்றங்கால் அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. எட்டு லட்சம் ரூபாய் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், வேம்பு, மகிழம், இலுப்பை, சிவப்பு சந்தனம், மகாகனி, புளி, தேக்கு, மருதம், நாவல், பலா, நாகலிங்கம் போன்ற மரங்களின் நாற்றுகளை, நாற்றங்காலில் உற்பத்தி செய்து, தேவைப்படுவோருக்கு வினியோகம் செய்து லாபம் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யும் மரக்கன்றுகள் நல்ல முறையில் கண்காணிக்கப்பட்டு தரமாக இருப்பது உறுதி செய்யப்படும். இதில் சேர்ந்து பயன் பெற விரும்புவோர், வேளாண் உதவி அலுவர்கள் அல்லது பொள்ளாச்சி வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.