உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எண்ணெய் குழாய் பதிக்கும் பணி; கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு

எண்ணெய் குழாய் பதிக்கும் பணி; கருப்பு கொடி காட்டி விவசாயிகள் எதிர்ப்பு

சூலுார்; விளை நிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கருப்பு கொடி காட்டி நேற்று போராட்டம் நடத்தினர்.கோவை இருகூரில் இருந்து பெங்களூரு மாநிலம் தேவனஹள்ளி வரை விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை, மறியல் உள்ளிட்ட போராட்டங்களை விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில், சூலுார் பகுதியில் குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கருப்பு கொடி காட்டி நேற்று போராட்டம் நடத்தினர். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:விவசாய நிலங்கள், விவசாயிகளை பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் ஆதரவு தரமாட்டோம். விவசாயிகளை பாதுகாப்போம், என, தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இருகூரில் இருந்து முத்துார் வரை, 70 கி.மீ., துாரம் விளைநிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்படுகிறது. முத்துாரில் இருந்து தேவனஹள்ளி வரை சாலை ஓரமாக குழாய் பதிக்கப்பட உள்ளது. விளைநிலங்களில் குழாய் வேண்டாம். சாலை ஓரமாக பதியுங்கள் என, கோரிக்கை விடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இரவு பகலாக எங்கள் பூமியில் வேலை செய்கிறார்கள். பணியை நிறுத்தாவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !