முதுமை கால சுறுசுறுப்பு இதயத்தை காக்கும்! ஆலோசனை கூறுகிறார் நீரிழிவு நோய் டாக்டர்
இதய நோய் என்பது தற்போது சாதாரணமாகி விட்டது. இதய நோயில் இருந்து பாதுகாக்க டாக்டர்கள் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். முதுமை காலங்களில் ஏற்படும் மன அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவை இதயத்தை பாதிக்கிறது. முதுமை காலத்தில் இதயத்தை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என, நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் துரைகண்ணன் சில ஆலோசனைகளை கூறினார்.உடலுக்கு வயதாகும்போது உடல் உறுப்புகளுக்கும் வயதாக துவங்கி விடும். ரத்தக்குழாய்கள் சுருங்க துவங்கி, இதயத்துக்கு ரத்தம் பாய்வது குறைந்து விடும். சிலருக்கு ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து விடும். இதனால், இதயத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கும். 30 வயதில் இருந்து ரத்தக்குழாய்கள் சுருங்கத் துவங்கி விடுகிறது. உடல் உழைப்பு இல்லாமை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவை இதயத்தை பாதிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.எனவே, 40 வயதை துவக்கும்போது ஆண்கள், பெண்கள் என இரு பாலினத்தவரும் உடல் நலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வெகுநேரம் துாங்குவதை தவிர்த்து, அதிகாலை, 5:00 முதல் 5:30 மணிக்குள் எழுந்து, காலைக்கடன்களை முடித்து விட வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவு. காலை, 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.மூச்சுப்பயிற்சி செய்தால் இதயத்துக்கு ரத்தப்போக்கு சீராக இருக்கும். சோம்பேறித்தனம், மன அழுத்தம் இதயத்தை பாதித்து மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல், முதுமை காலங்களில் உடற்பயிற்சியின் போது ஓடக்கூடாது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இதயத்தை மட்டுமல்ல, கண், சிறுநீரகத்தையும் பாதிக்கும். இணை நோய் உள்ளவர்கள் தங்களது உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும். அதிகப்படியான உணவு, காரமான உணவு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பசிக்கும்போது உணவருந்துவது நல்லது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.