உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தேர்தல் பயிற்சியில் பழைய பிஸ்கெட்!

 தேர்தல் பயிற்சியில் பழைய பிஸ்கெட்!

கோவை: தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற அலுவலர்களுக்கு, காலாவதியான பிஸ்கட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள், அனைத்து தொகுதிகளிலும் சமீபத்தில் நடந்தன. மேட்டுப்பாளையம் தொகுதிக்கான ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, ஆலாங்கொம்பு அருகேயுள்ள தனியார் பள்ளியில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். பயிற்சியின் போது அவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. பிஸ்கட்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே காலாவதியானது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், உடனடியாக ஒருங்கிணைப்பாளர்களிடம் முறையிட்டு அதிருப்தியை தெரிவித்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவினரிடம் விசாரித்தபோது, 'தெரியாமல் காலாவதியான பிஸ்கட்கள் வழங்கப்பட்டு விட்டன. தகவல் கிடைத்தவுடன் பிஸ்கெட்டுகள் அடங்கிய இரண்டு பெட்டிகள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டன. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ