ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது
கோவை : கோவை, பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், பீளமேடு ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள அகிலாண்டேஸ்வவரி மண்டபம் அருகில் உள்ள, காட்டுப்பகுதிக்கு சென்றனர். அங்கு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காருக்கு வெளியில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் வருவதை பார்த்த அவர்கள், அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருப்பூர், அவிநாசியை சேர்ந்த நவுசாத் அலி, 36 மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவா, 24 என்பது தெரியவந்தது. அங்கிருந்த காரை சோதனை செய்த போது, காரின் பின் இருக்கையில், ஒரு பிளாஸ்டிக் பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதில் சுமார், 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சா விற்பனைக்காக 20 'ஜிப் லாக் கவர்'களும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.