ஆளுக்கொரு போதை!
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை; போதை புழக்கத்தை தடுக்க அரசு தவறி விட்டது என்று கூறி தெற்கு தாலுகா அலுவலகம் அருகே த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத் பேசியதாவது: தமிழகத்தின் பாதுகாப்பிற்காக, ஜனநாயகத்தின் குரலாக இங்கே நிற்கிறோம். தமிழகத்தில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு அவசியம். ஒவ்வொரு சமூகத்திலும் மக்கள் தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டால், அதற்கேற்ப பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும். தமிழகத்தில் போதை கலாசாரம் விஷம் போல பரவி உள்ளது. கல்லுாரி மாணவன் முதல் முதியோர் வரை, ஆளுக்கு ஒரு வகையான போதை வஸ்து பயன்படுத்துகின்றனர். போதை சாதாரண புகைப்பழக்கம் போல மாறிவிட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை முழுமையாக குறைக்க வேண்டும் ஒருகடையை மூடினால் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் வேறு கடையை திறக்கின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது. இவ்வாறு சம்பத் பேசினார். திரளான தொண்டர்கள் கட்சி துண்டு அணிந்தும் கொடிகளை ஏந்தியும் பங்கேற்றனர்.
அ.தி.மு.க. பாணியில் பேச்சு
அம்மா இருக்கும் திசை நோக்கி வணங்கி பேச்சை துவக்குகிறேன் என்று ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்கள் பேச்சை துவக்குவர். அதே பாணியில் நேற்று த.வெ.க. தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ், தலைவர் இருக்கும் திசை நோக்கி வணங்கி பேச்சை துவக்குகிறேன் என்று ஆரம்பித்தார். சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு உதாரணமாக கோவை விமானநிலையம் அருகே மாணவி பலாத்கார சம்பவத்தை குறிப்பிட்டார். அப்போது கைதட்டலுக்கு பதிலாக ரசிகர்கள் விசில் ஊதி ஆரவாரம் செய்தனர்.