மேலும் செய்திகள்
தீபாவளி நெரிசல் தடுக்க போக்குவரத்து மாற்றம்
16-Oct-2025
திருப்பூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தனது சொந்த ஊரான திருப்பூருக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று வர உள்ளார். இதையொட்டி, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் திருப்பூர். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக திருப்பூருக்கு இன்று வருகிறார். மாலை, 5:00 மணிக்கு தியாகி குமரன் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்; மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின், ெஷரீப் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு செல்கிறார். அருகே உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்ற பின், இரவு டாலர் தோட்டத்துக்கு செல்கிறார். அன்றிரவு அங்கு தங்கி விட்டு நாளை சந்திராபுரத்தில் உள்ள குலதெய்வ கோவில்; முத்துார் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்கிறார். மதியம் திருப்பூர் வேலாயுதசுவாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கடந்த இரு நாட்களாக ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ள இடங்களில் திருப்பூர் மாநகர போலீசார், சென்னை, டில்லி போலீசார் ஆய்வுகளை மேற்கொண்டு, பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். நேற்று காலை, பாதுகாப்பு பணி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போலீசார் பணியில் ஈடுபட்டனர். குமரன் சிலை உள்ளிட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரம் முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், 600 போலீசார், தர்மபுரி, சேலம், கோவை மாவட்டத்தை சேர்ந்த, 200 போலீசார், போக்குவரத்து போலீசார், 100 பேர் உட்பட, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து மாற்றம் துணை ஜனாதிபதி வருகையொட்டி இன்று மற்றும் நாளை திருப்பூரில் சில போக்குவரத்து மாற்றங்களை செய்துள்ளனர். அதில், மாநகருக்கு அவிநாசி வழியாக வரும் கனரக வாகனங்கள், திருமுருகன்பூண்டி வழியாக இடதுபுறம் திரும்பி, பூலுவபட்டி வழியாக பி.என். ரோட்டை அடைந்து நகருக்குள் வரலாம். வழக்கமாக, தாராபுரம் ரோடு வழியாக நகருக்குள் வரும் கனரக வாகனங்கள் மாற்றாக, பெருந்தொழுவு, கூலிபாளையம் நால்ரோடு வழியாக ஊத்துக்குளி ரோட்டை அடைந்து நகருக்குள் வரலாம். பல்லடம் ரோடு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் கோவில்வழி பஸ் ஸ்டாப் வழியாக, அய்யம்பாளையம் நால் ரோடு வழியாக காளிகுமாரசாமி கோவில் ரோடு அடைந்து, வீரபாண்டி பிரிவு வழியாக பல்லடம் ரோட்டை அடைந்து நகருக்குள் வரலாம். இன்று குமரன் ரோடு, பார்க் ரோடு, மங்கலம் ரோடு, காமராஜர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், பயணிகள் தங்கள் பயண திட்டத்தை அதற்கேற்ற வகையில் வடிவமைத்து கொள்ள வேண்டும். நாளை, தாராபுரம் ரோடு, காமராஜர் ரோடு, வேலாயுதசாமி திருமண மண்டபம், சந்திராபுரம் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதற்கேற்ற வகையில், பயண திட்டத்தை வடிவமைத்து கொள்ளுமாறு திருப்பூர் மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
16-Oct-2025