ஆன்லைனில் ரூ.47 லட்சம் மோசடி; வடமாநில ஆசாமிக்கு 2 ஆண்டு சிறை
கோவை; ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக பணம் கிடைக்கும் எனக்கூறி ஏமாற்றி, 47 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில், ராஜஸ்தான் வாலிபருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, செல்வபுரத்தை சேர்ந்தவர் மதன்குமார். நகை பட்டறை அதிபரான இவரிடம், அறிமுகம் இல்லாத நபர்கள் இவரை தொடர்பு கொண்டனர். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி, ெஹம் செக்யூரிட்டீஸ் எக்சேஞ்ச் என்ற வாட்ஸ்ஆப் குழுவில் அவரது மொபைல் எண்ணை சேர்த்தனர். புதிதாக வங்கி கணக்கு துவக்கி அதில், பணத்தை போட செய்தனர். இதை நம்பிய மதன் குமார் தனது பல்வேறு வங்கி கணக்குகளில் இருந்து, 47 லட்சம் ரூபாய் அனுப்பினார். ஆனால், பல மாதங்களாகி யும் பணம் திரும்ப வரவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மதன்குமார், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கையில், ராஜஸ்தான் மாநிலம், நவ்கர் பகுதியை சேர்ந்த சுரேந்திர தேவால்,24, என்பவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. தனிப்படை போலீசார், 2025, ஏப்., 22ல், சுரேந்திர தேவாலை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். 40 லட்சம் ரூபாய் கைப்பற்றினர். இது தொடர்பாக, கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார், குற்றம் சாட்டப்பட்ட சுரேந்திரதேவாலுக்கு, இரண்டு ஆண்டு சிறை, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார். இந்த வழக்கில், மூன்று மாதத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.