ஊட்டி மலை ரயிலுக்கு 116 வயது; சுற்றுலா பயணியர் குதுாகலம்
மேட்டுப்பாளையம் : ஊட்டி மலை ரயிலின், 116வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, ரயிலில் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு தினமும் காலை, 7:15 மணிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணியர், ஆர்வம் கட்டி வருகின்றனர்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1899ம் ஆண்டு ஜூன் 15ல் முதல் முதலில் மேட்டுப்பாளையம் -- குன்னுார் இடையே மலை ரயில் இயக்கப்பட்டது. குன்னூரில் இருந்து ஊட்டிக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. 1908ம் ஆண்டு அக்.,15ல், முதன் முதலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேரடியாக மலை ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்., 15ம் தேதி நீலகிரி மலை ரயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம், 2005 ஜூலை 15ல் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டி வரை உள்ள மலை ரயில் பாதையில், 16 குகைகளும், 216 வளைவுகளும், 250 பாலங்களும் உள்ளன. நேற்று ஊட்டி மலைரயில் இயக்கத்தின், 116வது தினத்தை முன்னிட்டு காலையில், 150 பயணியருடன், மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.