திறந்த வெளியில் உணவு தயாரிப்பு: நுகர்வோர் பாதிப்பு
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், சாலையொட்டி அமைந்துள்ள சில உணவங்களில், முகப்பு பகுதியிலேயே சுகாதாரமின்றி உணவு தயாரிக்கப்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வோர், பொள்ளாச்சி மார்க்கமாகவே சென்று திரும்புகின்றனர். இதன் காரணமாக, பொள்ளாச்சி - ஆழியாறு இடையிலான சாலையோரங்களில், அதிகப்படியான உணவகங்கள் திறக்கப்படுகின்றன.ஆனால், இந்த உணவங்களில், போதிய சுகாதாரமின்றி, உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. ஓட்டல்களின் முகப்பு பகுதியிலேயே சமையலறை செயல்படுவதால், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, சாலையில் படிந்துள்ள மண், துாசி போன்றவை காற்றின் மூலம் பரவி, உணவுப் பொருட்களில் கலக்கிறது.அதேபோல், உணவு தயாரிக்கப்படும் இடம், சமையலறை ஆகியவை, 200 சதுர அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என விதிகள் உள்ளது. ஆனால், பல இடங்களில் விதிகளுக்கு மாறாக உணவு விற்பனை செய்யப்படுகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது: சாலையோரத்தில், திடீரென உணவகங்கள் திறக்கப்படுகின்றன. வாகனங்களில் தருவிக்கப்பட்டும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இக்கடைகள், உரிமம் மற்றும் பதிவு பெற்று செயல்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும்.இது ஒருபுறமிருக்க, இத்தகைய கடைகளால், சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. பாதுகாப்பு விதிகளை சரிவர பின்பற்றாத உணவகங்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.