ரயில்வே ஸ்டேஷனில் மூடப்பட்ட முன்பதிவு மையத்தை திறக்கணும்!
பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், மூடப்பட்ட முன்பதிவு மையத்தை மீண்டும் திறக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ரயில் பயணியர் நலச்சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள், அரசியல் சமூக இயக்கதினர், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறியதாவது:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், கடந்த, 2ம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்பதிவு மையம் மூடப்பட்டது. இதனால், பயணியர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.இது குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி, முன்பதிவு மையத்தை திறந்து, காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை செயல்படுத்த வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.ரயில்வே வாரியத்தால் பல மாதங்களுக்கு முன்பே இயக்க அனுமதிக்கப்பட்ட மங்களூரூ - ராமேஸ்வரம் (பொள்ளாச்சி வழி) புதிய ரயிலை இயக்கவும், திருவனந்தபுரம் - பொள்ளாச்சி மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்க (பாம்பன் பாலம் திறந்த பின்) ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரயில்வே துறையால் முன்மொழிவு செய்யப்பட்ட, பொள்ளாச்சி - மேட்டுப்பாளையம் இடையே நேரடி பயணியர் ரயில், கோவை - பொள்ளாச்சி - மயிலாடுதுறை (பழநி, திண்டுக்கல், திருச்சி வழி) முன்பதிவில்லா பயணியர் ரயில் இயக்க வேண்டும்.பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி, பழநி வரை நீட்டிக்க வேண்டும்.கோவை - பொள்ளாச்சி - ராமேஸ்வரம் (பழநி, திண்டுக்கல், மதுரை வழி) இரவு நேர விரைவு ரயில்; கோவை - பொள்ளாச்சி - தாம்பரம் (பழநி, திண்டுக்கல், திருச்சி வழி) இரவு நேர நிரந்தர விரைவு ரயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது. இவ்வாறு, கூறினர்.