சிமென்ட் ஆலையை மூட உத்தரவு! மதுக்கரை மக்கள் நிம்மதி
கோவை: கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில், இயங்கி வரும் சிமென்ட் தொழிற்சாலையை மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த சிமென்ட் தொழிற்சாலையிலிருந்து, வெளியேறும் கழிவுப்புகையிலிருந்து சிமென்ட் துகள்கள் வெளியேறி, சுற்றியுள்ள குடியிருப்புகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள். செடி, கொடி, மரங்கள் மீது படிவதாக, குரும்பபாளையம் மக்கள் கலெக்டரை சந்தித்து முறையிட்டனர். தொழிற்சாலை உற்பத்தியை நிறுத்த வலியுறுத்தினர். கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் குரும்பபாளையம், மதுக்கரை உள்ளிட்ட தனியார் சிமென்ட் தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதி மக்களிடம், உண்மை நிலையை விசாரித்தனர். நோட்டீஸ்
இதையடுத்து, காற்றில் கலந்துள்ள துாசு, உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை அளக்கும் கருவிகளை, குரும்ப பாளையம் பகுதிகளில் பொருத்தி, மாசுக்கட்டுப்பாடு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மாசு அளவு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் நோட்டீஸ் வழங்கினர். இது குறித்து, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில், காற்றின் தர அளவு (ஏ.க்யூ. ஐ.) 100க்குள் இருக்க வேண்டும். ஆனால் 150 - 200க்குள் இருக்கிறது. இது, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். காற்றின் சுகாதார குறியீடும், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் 4 - 6க்குள் உள்ளது. காற்றை மாசுபடுத்தும் துகள், மாசு அளவும் அதிகரித்து, காற்றின் தரத்தை மேலும் மாசடையச்செய்துள்ளது. அதனால் சிமென்ட் தொழிற்சாலையை ஆய்வு செய்து, உற்பத்தியை தற்காலிகமாக வரும் அக்.,1 முதல் நிறுத்துமாறு நோட்டீஸ் வழங்கியுள்ளோம், எச்சரிக்கையை மீறி இயக்கினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறோம். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.