மருத்துவ சிகிச்சைக்கு காப்பீடு கட்டணம் வழங்க உத்தரவு
கோவை; கோவை அருகேயுள்ள மதுக்கரை, அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ்,62; ஐ.சி.ஐ.சி.ஐ., லம்போர்டு ெஹல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 2024, ஜன., 21ல் மருத்துவ காப்பீடு செய்தார். இதற்காக பிரீமிய தொகை, 38,895 ரூபாய் செலுத்தினார். இந்நிலையில் அவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இருதய அடைப்பு இருந்ததால், உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கான பில் தொகை, 3.66 லட்சம் ரூபாய் கிளைம் செய்யக்கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் வழங்க மறுத்ததால், கடன் பெற்று மருத்துவமனைக்கு செலுத்தினார்.இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு சட்ட அறிவிப்பு கொடுத்த போது, எந்த காரணமும் தெரிவிக்காமல், நாகராஜின் மருத்துவ காப்பீடு பாலிசியை, ரத்து செய்து மெயில் அனுப்பினர். அதிர்ச்சியடைந்த அவர், விளக்கம் கேட்ட போதும் பதில் அளிக்கவில்லை. இதனால் கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மருத்துவ காப்பீடு பாலிசிக்கு பிரீமிய தொகை பெற்றும், சிகிச்சைக்கு பணம் வழங்காமல் சேவை குறைபாடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்சூரன்ஸ் நிறுவனமானது, மனுதாரருக்கு சிகிச்சை கட்டணம், 3.66 லட்சம் ரூபாய், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.