வெள்ளலுார் கிடங்கில் தேங்கிய குப்பையை போர்க்கால அடிப்படையில் அழிக்க உத்தரவு
கோவை; வெள்ளலுார் கிடங்கில் தேங்கிய குப்பையை இந்தாண்டு இறுதிக்குள் போர்க்கால அடிப்படையில் அழித்து இடத்தை மீட்குமாறு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் சேகாரமாகும் மக்கும், மக்காதது, இ-வேஸ்ட் என, 1,250 டன் வரையிலான குப்பை வெள்ளலுார் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக குவிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் துர்நாற்றம், ஈ தொல்லை, நிலத்தடிநீர் மட்டம் மாசுபாடு என எண்ணற்ற துயரங்களை இன்றும் அனுபவிக்கின்றனர்.பிரச்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வரை செல்ல விசாரணையும் நடந்துவருகிறது. இந்த விஷயத்தில் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் மீது, பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளது.இந்நிலையில், கடந்த, 23ம் தேதி பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. சுமார், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணையில், மாநகராட்சி அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்காது, நீதிபதி மேலும் அதிருப்தி அடைந்தார்.பின்னர், நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:வெள்ளலுார் கிடங்கில், 7 லட்சத்து, 94 ஆயிரத்து, 139 மெட்ரிக் டன் குப்பை தேங்கியுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த ஜூன் மாதம் அண்ணா பல்கலை சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தினர் நடத்திய ஆய்வில், 9 லட்சத்து, 40 ஆயிரத்து, 44 மெட்ரிக் டன் இருப்பதாகவும், அவை 'பயோ-மைனிங்' முறையில் அழிக்கப்படுவதாகவும் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.கடந்த, 2021 பிப்., மாதம் 'பயோ மைனிங்' பணி துவங்கிய நிலையில், அங்குள்ள மூன்று இயந்திரங்கள் கொண்டு அதிக அளவிலான குப்பையை எப்படி அழிக்க முடியும். இப்படியே சென்றால் இக்குப்பையை அழிக்க, இன்னும் இரு ஆண்டுகளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கை சமர்ப்பிக்கணும்
எனவே, போர்க்கால அடிப்படையில் இந்த ஆண்டுக்குள் குப்பையை அழித்து இடத்தை மீட்டெடுக்க வேண்டும். இதற்கென, நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலர் தலைமையில் அமைக்கப்படும் கமிட்டியிடம், குப்பையை அழிப்பதற்கான நடவடிக்கைகள், திட்டம், காலவரையறை ஆகியன குறித்து, மாநகராட்சி கமிஷனர் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.கமிட்டி,மாநகராட்சியின் நடவடிக்கைகளை கண்காணித்து பசுமை தீர்ப்பாயத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மாதம்தோறும் குப்பை கிடங்கில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் ஜீவராஜ் ஆகியோர் ஆஜராகினர். இவ்வழக்கு வரும் ஆக., 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.போர்க்கால அடிப்படையில் இந்த ஆண்டுக்குள் குப்பையை அழித்து இடத்தை மீட்டெடுக்க வேண்டும். இதற்கென, நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமை செயலர் தலைமையில் அமைக்கப்படும் கமிட்டியிடம், குப்பையை அழிப்பதற்கான நடவடிக்கைகள், திட்டம், காலவரையறை ஆகியன குறித்து, மாநகராட்சி கமிஷனர் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.