உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.டி.நாயுடு மேம்பாலம் பயன்படுத்தும் வாகனங்களை கணக்கெடுக்க உத்தரவு

ஜி.டி.நாயுடு மேம்பாலம் பயன்படுத்தும் வாகனங்களை கணக்கெடுக்க உத்தரவு

கோவை: கோவை, அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கி.மீ.க்கு மேம்பாலம் கட்டப்பட்டு, ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அக். 9ல் முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. வாகனத்தில் 60 கி.மீ. வேகத்தில் பயணித்தால், 10.1 கி.மீ. துாரத்தை 10 நிமிடங்களில் கடந்து விடலாம். அதிவேகமாக செல்வதை தவிர்க்க, ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இறங்கு தளங்கள் மற்றும் ஏறு தளங்கள் அமைவிடங்களில் வேகத்தை குறைத்து, 40 கி.மீ. வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டு, பெயின்டால் எழுதப்பட்டு உள்ளது. விடுபட்ட இடங்களில் மையத்தடுப்பு, மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால், பி.ஆர்.எஸ்., மைதானம் அருகே உள்ள ஏறுதளம் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அத்தளத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்ட, இரும்பு கம்பி கட்டப்பட்டிருந்தது; மழைக்கு துருப்பிடிக்க ஆரம்பித்தால், அப்பகுதியில் கான்கிரீட் சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது. தற்போது மேம்பாலத்தை எத்தனை வாகனங்கள் பயன்படுத்துகின்றன, சாலை மார்க்கமாக எத்தனை வாகனங்கள் செல்கின்றன, எந்தெந்த ஏறுதளங்கள் மற்றும் இறங்குதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன, சாலையில் போக்குவரத்து நெருக்கடி குறைந்திருக்கிறதா, சாலையை பாதசாரிகள் கடப்பதற்கு சிரமப்படுகிறார்களா, மீண்டும் சிக்னல் நடைமுறை கொண்டு வர வேண்டுமா என்பதை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியை, நவ. 3ல் நெடுஞ்சாலைத்துறையினர் துவக்குகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ