பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா துவக்கம்
அன்னுார்: எல்லப்பாளையம் பழனி ஆண்டவர் கோவிலில் தற்போது பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன் ஆகியோருக்கு புதிய கற்கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கொடிமரம் அமைக்கப்பட்டு விநாயகர், சண்டிகேஸ்வரர் திருமேனிகள் நிறுவப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழா நேற்று திருவிளக்கு வழிபாடுடன் துவங்கியது. இன்று மாலை விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. வரும் 2ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், கோபுர கலசம் வைத்தலும் நடக்கிறது. மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், எண் வகை மருந்து சாத்துதலும் நடைபெறுகிறது. வரும் 3ம் தேதி காலை 9:00 மணிக்கு பழனி ஆண்டவர், திருச்சுற்று தெய்வங்கள், கோபுரம் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து மகா அபிஷேகமும், தச தரிசனமும் நடைபெறுகிறது. விழாவில், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பழனி சாது சண்முக அடிகள் ஆகியோர் அருளுரை வழங்குகின்றனர்.