சாலையோரத்தில் குப்பை குவிப்பு; கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, மாக்கினாம்பட்டி - நாட்டுக்கல்பாளையம் இடையிலான சாலையோரத்தில் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரம் பாதிக்கிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், 150 வீடுகளுக்கு ஒரு துாய்மை பணியாளர் நியமிக்கப்பட்டு, வீடுகள்தோறும் நேரடியாக குப்பை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால், பல ஊராட்சிகளில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் குப்பை, சாலையோரம் குவிக்கப்படுகிறது. மாக்கினாம்பட்டி - நாட்டுக்கல்பாளையம் இடையிலான சாலையோரம், குப்பை குவிப்பதால், சுகாதாரம் பாதித்து, பொதுமக்கள் கடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.தன்னார்வலர்கள் கூறியதாவது:வீடு வீடாக குப்பை சேகரிக்க, துாய்மை பணியாளளர்களுக்கு, மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், பலரும் இப்பணி மேற்கொள்ள முன்வருவதில்லை.வீடுகளில் சேகரமாகும் குப்பையை, மக்களே திறந்த வெளியில் வீசுகின்றனர். சாலையோரத்தில் குவிக்கப்பட்டு அவ்வப்போது, தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால், நிலம் மட்டுமின்றி காற்றும் மாசடைகிறது. எனவே, பொது இடங்களில் குப்பை கொட்டுவதை கண்டறிந்து தடுக்க, ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.