ஸ்டாண்டை புறக்கணிக்கும் அரசு பஸ்கள்; பயணிகள் பரிதவிப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, அதிகப்படியான தொலைதுார மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. டிரைவர், கண்டக்டர் ஷிப்ட் மாற்றத்தின் போது, அந்தந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு, பணிமனைக்கு செல்ல வேண்டும் என்பதே விதி. ஆனால், சில பஸ் டிரைவர்கள்,ஸ்டாண்டிற்குள் பஸ்சை கொண்டு செல்வதில்லை. பஸ் ஸ்டாண்டிற்கு வெளியில் ரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால், பின்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, பயணிகள் வெகுவாக பாதிக்கின்றனர். பயணிகள் கூறியதாவது: டவுன் பஸ் மட்டுமின்றி மொபசல் பஸ்களும், சில நேரங்களில், பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல், ரவுண்டானா பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால், பிற ஊர்களுக்குச் செல்லும் பயணிகள், அந்த பஸ்சை பிடிப்பதற்காக, போக்குவரத்து நிறைந்த சாலையை, அவசர கதியில் கடந்து செல்ல வேணடியுள்ளது. இது குறித்து, போலீசாரே கேள்வி எழுப்பினாலும், அரசு டிரைவர்கள் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். துறை ரீதியான அதிகாரிகள் அவ்வபோது ஆய்வு நடத்தி, அனைத்து பஸ்களையும் ஸ்டாண்டிற்குள் சென்று திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.