பள்ளியில் இல்லை கழிப்பிடம்: மனு கொடுத்து மக்கள் ஆவேசம்
பொள்ளாச்சி: 'போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும்,' என சப் - கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்து வலியுறுத்தினர். பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: போடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அதில், 50 மாணவியர் உள்ளனர்.இப்பள்ளியில், மாணவ, மாணவியர் இயற்கை உபாதை கழிக்க போதுமான கழிப்பிட வசதியில்லை. இதனால், மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். பருவம் எய்திய மாணவியர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பள்ளியில், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர். * நல்லாம்பள்ளி பொதுமக்கள் சார்பில், சுந்தரகவுண்டனுார் பூர்ண சந்திரஜெயன் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லாம்பள்ளி கிராமத்தில், அத்தியாவசிய தேவைகளான தெருவிளக்கு, சீரான தார்சாலை வசதிகள் இல்லை. இரவு நேரங்களில், வாகனத்தில் செல்ல அச்சமாக உள்ளது. இதனால், நல்லாம்பள்ளி பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். கிராமத்துக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்,' என தெரிவித்துள்ளனர்.