உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏழே நாளில் வீடுகளை காலி செய்ய உத்தரவு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

ஏழே நாளில் வீடுகளை காலி செய்ய உத்தரவு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

கோவை : கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கிராந்தி குமார் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்ட, பல துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, நால்வர் நகர் மக்கள் குழந்தைகளுடன், கலெக்டர் அலுவலகம் முன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறியதாவது: நால்வர் நகரில் கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கிறோம். சமீபத்தில் இங்கே வந்த வருவாய் துறை அதிகாரிகள், ஏழு நாட்களில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று, நோட்டீஸ் வழங்கியுள்ளனர். நாங்கள் எங்கே போவது?நாங்கள் வசிக்கும் பகுதி, அரசு புறம்போக்கு பகுதி. இந்த இடத்தில், 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்தும், எங்களுக்கு பட்டா வழங்க அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வீடுகளை காலி செய்ய மாட்டோம். அதே இடத்தில் எங்களுக்கு, மனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.குறிச்சி புதுநகர் பகுதி மக்கள் அளித்த மனுவில், ' நாங்கள் வசிக்கும் பகுதியில் மதுக்கூடம் ( பார்) அமைக்க கட்டுமான பணி நடக்கிறது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பார் அமைப்பதால், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிரமம். அதனால் பார் திறப்பதற்கான உத்தரவை, நிறுத்தி வைக்க வேண்டும்' என்றனர். நீலம்பூர், சீரபாளையம், மலுமிச்சம்பட்டி ஊராட்சி மக்கள், தங்களது ஊராட்சியை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, வலியுறுத்தி மனு கொடுத்தனர். தேவர் பவுண்டேஷன் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், 'தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள முருகன் கோவில்களை விரிவுபடுத்தி, நிதி உதவி செய்த சான்டோ சின்னப்ப தேவருக்கு, மருதமலை சாலையில் சிலை அமைத்து, மணிமண்டபம் கட்ட அரசு சார்பில் நிலம் வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை