பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை காப்பாற்றிய மக்கள்
மேட்டுப்பாளையம்: சிறுமுகை வச்சினம்பாளையம் பகுதியில், பவானி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய குடுப்பத்தினரை, ஊர்மக்கள் காப்பாற்றினர்.மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை அருகில் வச்சினம்பாளையம் பகுதி உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் பவானி ஆறு, வச்சினம்பாளையம் வழியாக சென்று, பவானிசாகர் அணையில் கலக்கிறது.பவானி ஆற்றின் ஆபத்தான பகுதியாக வச்சினம்பாளையம் பகுதி கண்டறியப்பட்டுள்ளதால், பவானி ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று, அப்பகுதியில் காரமடையை சேர்ந்த குடும்பத்தினர் ஐந்து பேர், பவானி ஆற்றில் துணி துவைத்துக் கொண்டும், குளித்துக் கொண்டும் இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. சுதாரித்துக் கொண்ட அந்த குடும்பத்தினர், ஆற்றின் நடுப்பகுதியில் இருந்து, கரைக்கு செல்ல முயன்றனர். ஆனால், நீரின் வேகம் அதிகரிப்பால், முடியவில்லை. இதனால் காப்பாற்றக்கோரி கூக்குரல் இட்டனர். இதை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்தபோது, அந்த குடும்பத்தினரை மீட்க தாங்களாகவே முயற்சிகளை மேற்கொண்டனர். உடனடியாக கயிறு கட்டி ஆற்றில் இறங்கி குடும்பத்தினரை பவானி ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அக்குடும்பத்தில் இருந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உயிர் தப்பினர்.