தென்னையில் பூச்சி மேலாண்மை வேளாண் மாணவியர் விளக்கம்
பெ.நா.பாளையம், ; தென்னையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும், சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து, விவசாயிகளுக்கு கோவை வேளாண் கல்லூரி மாணவியர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் தென்னை விவசாய தோட்டத்தில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கு, மாணவியர் செயல் விளக்கம் அளித்தனர்.மாணவியர் கூறுகையில், 'வெள்ளை ஈக்களின் வகைகளில் ஒன்றான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தமிழகத்தில், 2016ம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்டன. சாறு உறிஞ்சும் பூச்சிகளான இவை, இலைகளின் அடிபாகத்தில் சுருள் வடிவத்தில் முட்டையிடும். இதைக் கொண்டு, அவற்றை எளிதில் கண்டறியலாம். இதன் தாக்கத்தால் பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படும். இந்த வகை வெள்ளை ஈக்கள் தென்னை, கொய்யா, மா, சப்போட்டா மற்றும் வாழை உள்ளிட்ட பயிர்களில் அதிக அளவு காணப்படும். மேலும், தேன் போன்ற திரவத்தை உற்பத்தி செய்வதால், பூஞ்சானம் இலைகளின் மேல் பகுதியில் படர்ந்து, ஒளிச்சேர்க்கையை குறைத்து, பயிர்களின் உற்பத்தி திறனை பாதிக்கும். இவற்றின் மேலாண்மையில், ஒரு முக்கிய அங்கமாக மஞ்சள் ஒட்டு பொறிகள் செயல்படுகின்றன. தரை மட்டத்திலிருந்து ஆறு அடி உயரத்தில், இந்த பொறிகளை அமைக்க வேண்டும்; மரங்களுக்கு இடையில் குச்சிகளின் உதவி கொண்டு, ஆறடி உயரத்தில் இவற்றை அமைக்கலாம். ஒட்டும் திரவமாக விளக்கெண்ணெய் அல்லது கிரீஸ் இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்' என்றனர்.நிகழ்ச்சியில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.