டாக்டர் நியமிக்க கோரி இ.கம்யூ., சார்பில் மனு
வால்பாறை : அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நிரந்தர டாக்டர் நியமிக்க கோரி, இ.கம்யூ.,கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலா தலமாக உள்ளதால், பல்வேறு ஊர்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.இங்கு டாக்டர் நியமிக்க கோரி, மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை தாலுகா இ.கம்யூ., கட்சியின் தாலுகா செயலாளர் மோகன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் அருகில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியை சேர்ந்த மக்கள் அதிக அளவில் மருத்துவ சிகிச்சைக்கு வருகின்றனர். குறிப்பாக, பிரவசத்துக்காக கர்ப்பிணிகள் அதிகளவில் வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சுகாதார நிலையத்தில் நிரந்தர டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத நிலையில், பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைக்கு தான் செல்கின்றனர்.அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனையில், தற்போது டாக்டர் பணியிடமும் காலியாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர டாக்டர்கள் நியமிக்க கோரி, இ.கம்யூ.,கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.