உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனத்துறையினர் வரும்வரை காத்திருக்காது பன்றி! எதற்கும் உதவாது அரசாணை; விவசாயிகள் கடும் அதிருப்தி

வனத்துறையினர் வரும்வரை காத்திருக்காது பன்றி! எதற்கும் உதவாது அரசாணை; விவசாயிகள் கடும் அதிருப்தி

கோவை; விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வது தொடர்பான, அரசின் அறிவிப்பு வெறும் கண்துடைப்பு என, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.விவசாய நிலங்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக்கொல்ல அனுமதிக்கக் கோரி, விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.இது தொடர்பாக, வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை சுட அனுமதித்து, 9.1.2025ம் தேதியிட்ட அரசாணை (டி) எண் 7 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை வெறும் கண்துடைப்பு என, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.வன உயிரினங்களால் ஏற்படும் பயிர், உயிர் சேதங்களை, குறிப்பாக காட்டுப்பன்றி ஊடுருவலைக் கட்டுப்படுத்துவதற்காக, அரசால் அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட குழு பரிந்துரை செய்தவற்றில், சில பரிந்துரைகள் அரசாணையில் இடம்பெற்றுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காட்டுப்பன்றி பிரச்னைக்கு போதிய தீர்வு தரப்படாமல், நடைமுறைக்கு சாத்தியமில்லாத விதிமுறைகளுடன், கண்துடைப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.அரசு அமைத்த குழுவின் உறுப்பினர் பழனிசாமி கூறுகையில், “எந்தவொரு வன உயிரினத்துக்கும் தீங்கிழைக்கக் கூடாது என்பதே, எங்களின் நோக்கம். அதே சமயம், வன விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் தடுக்கப்பட வேண்டும். காட்டுப் பன்றிகள் பல்கிப் பெருகி, காட்டிலிருந்து வெகுதூரம் வெளியேறி விட்டன. அரசின் தற்போதைய அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. நமக்குத் தேவை தற்காலிக நிவாரணம் அல்ல; நிரந்தரத் தீர்வு,” என்றார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க, மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி கூறுகையில், “அரசின் இந்த அறிவிப்பை தீர்வாக எடுத்துக் கொள்ள முடியாது. வனத்துறையினர் வரும் வரை, அந்த காட்டுப்பன்றிகள் அங்கேயே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஓடும் காட்டுப்பன்றியை சுடுமளவுக்கு அனுபவம் மிக்கவர் தேவை. எனவே, அரசாணையை நடைமுறைப்படுத்தும்போது எளிமைப்படுத்த வேண்டும். விவசாயிகளே நேரடியாக கட்டுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்,” என்றார்.தடாகம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:அரசாணையின்படி, காப்புக் காட்டில் இருந்து, 1 கி.மீ., தொலைவு வரையுள்ள பகுதியில் காட்டுப்பன்றிகளை சுட, அனுமதி இல்லை. 1 முதல் 3 கி.மீ., வரை வரும் காட்டுப்பன்றிகளை பிடித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும். 3 கி.மீ., தூரத்துக்கு மேல் உள்ள பகுதியில், நடமாடும் காட்டுப்பன்றிகளை வனத்துறை சுட அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தடாகம், ஆனைக்கட்டி, வீரபாண்டி புதூர், காளையனூர், சோமையனூர், மடத்தூர், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், தாளியூர், பாப்பநாயக்கன்பாளையம் என பெரும்பாலான கிராமங்களில், விவசாய நிலங்கள் காப்புக் காடுகளில் இருந்து, 3 கி.மீ., தூரத்துக்குள் உள்ளன.அரசாணையின்படி, இங்கே நுழையும் பன்றிகளை பிடித்து, மீண்டும் வனத்துக்குள்தான் விட வேண்டும். ஆனால், யார் பன்றிகளை பிடிப்பது? பன்றிகளைப் பிடிக்கும் திறன் உள்ளவர்கள் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இனி, மரப்பயிர்களையும் பயிரிட முடியாது போலிருக்கிறது.அரசின் இந்த அறிவிப்பு, வெறும் கண்துடைப்பு மட்டுமே. நிரந்தர தீர்வு காண, அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி