சுற்றுலா மேம்பாடு, ஐ.டி., பூங்கா ஏற்படுத்தி வளர்ச்சிக்கு திட்டமிடுங்க! அரசுக்கு தொழில்வர்த்தக சபை வலியுறுத்தல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆன்மிகம், சுற்றுலா நிறைந்த பகுதியாக உள்ள நிலையில், சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. ஐ.டி., பூங்கா வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றி, நகரின் வளர்ச்சிக்கு திட்டமிட வேண்டுமென, தொழில் வர்த்தக சபையினர் வலியுறுத்தி உள்ளனர். பொள்ளாச்சி வனச்சரகம், டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி என நான்கு வனச்சரகங்களை உள்ளடக்கியுள்ளது. இயற்கை மற்றும் ஆன்மிக தலங்கள் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை உள்ளடக்கி, பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சி காலத்தில் 'பொள்ளாச்சி மாவட்டம்' எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பொள்ளாச்சியை விட சிறு ஊர்கள் மாவட்டமாக அறிவிக்கப்பட்டாலும், பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்காததது மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோன்று, பொள்ளாச்சி ஆன்மிகம், சுற்றுலா நிறைந்த பகுதியாக உள்ளதால், சுற்றுலா பயணியருக்கு வழிகாட்ட சரியான வழிகாட்டிகள் இல்லை. இதை தவிர்க்க, பொள்ளாச்சி பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்து, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், 'பொள்ளாச்சி மாவட்டம்' அறிவிப்பு மற்றும் இப்பகுதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, அரசின் முதல் பட்ஜெட்டில் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என, பொதுமக்கள், தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். தொழில் வர்த்தக சபை தலைவர் முத்துசாமி கூறியதாவது: பொள்ளாச்சியில், சூழல் சுற்றுலா, பண்ணை மற்றும் தோட்ட சுற்றுலா, நலத்துறை சுற்றுலா, சாகச சுற்றுலா என சுற்றுலாவை பல வகைகளில் மேம்படுத்தலாம். மேலும், சென்னையில் உள்ளது போன்று, 'தக் ஷின் சித்ரா' என்ற கலாசார மையம் போன்று, கொங்கு கலாசாரத்தை பாதுகாக்க பொள்ளாச்சியில் மையம் துவங்க வேண்டும். பொள்ளாச்சி பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக உள்ள இடத்தில், சுற்றுலா தகவல் மையம் அமைக்க வேண்டும். பொள்ளாச்சியின் பழமையான புகைப்படங்கள், சுற்றுலா தகவல்கள் காட்சிப்படுத்தலாம். பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் பொறியியல் கல்லுாரிகள் அதிகளவு உள்ளன. இங்குள்ள பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ஐ.டி., பூங்கா அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்கினால், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பெண்கள், வேலைக்காக கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வது தவிர்க்கப்படும். பொள்ளாச்சியின் நீண்ட நாள் கோரிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிப்பாக வெளியிட்டால், பயனாக இருக்கும். பொள்ளாச்சி ஒருங்கிணைந்த கோர்ட் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், காலியாக உள்ள இடத்தில், கட்டண பார்க்கிங் வசதி ஏற்படுத்தலாம். இதனால், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு, கூறினார்.