காந்திசிலையை மறைத்து பிளக்ஸ் பேனர் அமைப்பு
வால்பாறை : கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலா ஸ்தலமாக உள்ளதால், அதிக அளவில் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். பஸ் ஸ்டாண்ட் அருகே காந்தி சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை சுற்றிலும் யாரும் விளம்பர பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என்று, நகராட்சி சார்பில் அறிவிப்பு வைத்துள்ளனர்.ஆனால், சமீப காலமாக இந்த இடத்தில் விதிமுறையை மீறி பல்வேறு அரசியல் கட்சியினர் பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.காந்தி சிலை வளாகத்தில் விளம்பர பேனர் வைக்க நகராட்சி நிர்வாகம் தடைவிதித்துள்ளது. நகராட்சி கமிஷனரின் உத்தரவை கட்சியினர் காற்றில் பறக்க விட்டு, காந்தி சிலையை மறைத்து பிளக்ஸ் பேனர் வைத்துள்ளதை அகற்ற, நகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், மிகவும் குறுகலாக உள்ளது. ஒரே நேரத்தில் மூன்று பஸ்களுக்கு மேல் நிற்க முடியாத நிலையில், இட நெருக்கடியான பகுதியில் அமைந்துள்ளது. காந்திசிலையை மறைத்து, அரசியல் கட்சியினர் பேனர்கள் வைப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக மக்கள் பல முறை நகராட்சிக்கு புகார் தெரிவித்தனர்.மேலும், காந்தி சிலையை மறைத்து விளம்பர பேனர்கள் வைப்பதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.