கோர்ட்டில் தற்கொலை மிரட்டல் விடுத்த போக்சோ கைதிக்கு 7 ஆண்டு சிறை
கோவை: கோவையில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், குற்றவாளிக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்து, போக்சோ கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை, தெற்கு உக்கடம், அல்அமீன் காலனியை சேர்ந்தவர் ரிஸ்வான், 36; கூலி தொழிலாளி. 2021, ஜனவரி 31ல், ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஒரு கடை முன் நின்றிருந்த எட்டு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்தார். சிறுமியின் தந்தை புகாரின்படி, ரிஸ்வானை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட ரிஸ்வானுக்கு, பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு, ஏழாண்டு சிறை, கொலை மிரட்டல் குற்றத்திற்கு ஐந்தாண்டு சிறை, 7,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில், இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. ஜாமினில் விடுவிக்கப்பட்ட ரிஸ்வான், ஜூன் 27ம் தேதி, போக்சோ கோர்ட்டிற்குள் தேசிய கொடியுடன் நுழைந்து கலாட்டா செய்தார். தன் மீதான வழக்கை வேறு கோர்ட்டிற்கு மாற்ற வேண்டும் என்று கூச்சலிட்டு, பிளேடை விழுங்கி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்று, ரிஸ்வானை பிடிக்க முயன்ற போது தப்பி சென்றார். தனிப்படை போலீசார், ரிஸ்வானை கடந்த 12ல் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.