காவல் உதவி மையம் திறப்பு
சூலுார்; சிந்தாமணி புதூர், கருமத்தம்பட்டியில் போக்குவரத்து காவல் உதவி மையத்தை, எஸ்.பி., கார்த்திகேயன் திறந்து வைத்தார்.சூலுார் அடுத்த சிந்தாமணிபுதூரில் கோவை - திருச்சி ரோடும், செங்கப்பள்ளி - வாளையாறு ரோடும் சந்திக்கின்றன. இங்கு, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், இங்கு போக்குவரத்து காவல் உதவி மையம் அமைத்து, போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.எஸ்.பி., கார்த்திகேயன் மையத்தை திறந்து வைத்து கூறுகையில், இரு தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் சிந்தாமணி புதூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து காவல் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில், கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்படும்.சட்டவிரோதமாக மது விற்ற, 18 ரெஸ்டாரண்ட்டுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும், என்றார். கருமத்தம்பட்டி டி.எஸ்.பி., தங்க ராமன், இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாத்துரை, எஸ்.ஐ., விக்னேஷ், மோகன்தாஸ், மற்றும் பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், முன்னாள் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதேபோல், கருமத்தம்பட்டி நால் ரோட்டில், காவல் உதவி மையத்தை, எஸ்.பி., திறந்து வைத்தார். டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, நகராட்சி தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.