விசைத்தறியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
சோமனூர்; ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு பெற்று தர கோரி, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை சோமனூரில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விசைத்தறி உள்ளது. ஒப்பந்த கூலி அடிப்படையில் இயக்கப்படும் விசைத்தறிகள் வாயிலாக, லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடக்கும் பேச்சுவார்த்தை மூலம் கூலி உயர்வை விசைத்தறியாளர்கள் பெற்று வந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்தப்படி கூலி கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். கடந்தாண்டு தொடக்கத்தில், கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்த, விசைத்தறி கூட்டமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஏழு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஜவளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை.இதனால், விரக்தியடைந்த விசைத்தறி சங்கத்தினர், கடந்த வாரத்தில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.அதன்படி, முதல் கட்டமாக, சோமனூர் பவர் ஹவுஸ் அருகில், நாளை, காலை, 10:00 மணிக்கு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில்,' கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் முடிவான ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்க வேண்டும்.வரும் காலத்தில் ஒப்பந்த கூலியை குறைக்காமல் வழங்கும் வகையில் சட்ட பாதுகாப்பை அமல்படுத்த வேண்டும். ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேசி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, புதிய கூலி உயர்வை ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நல ஆணையமும் நடவடிக்கை எடுக்க கோரியும் நாளை சோமனூரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்,' என்றனர்.