உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை; மருத்துவமனை கண்காணிப்பாளர் அட்வைஸ்

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை; மருத்துவமனை கண்காணிப்பாளர் அட்வைஸ்

பொள்ளாச்சி; டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும், என, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தெரிவித்தார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொள்ளாச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் எட்டு பேரும், இம்மாதம், 4 பேரும் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடந்தது. அதில், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது: மழை காரணமாக, தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதகிரித்துள்ளது என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில், கோவை மாவட்டமும் அடங்கும். பொதுமக்கள் தங்களுடைய வீட்டில் மற்றும் அருகாமையில் மழைநீர் தேங்கி இருந்தால் அதை வடித்து விட வேண்டும். செடிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் தொட்டிகள், தேங்காய் தொட்டிகள், டயர் போன்றவற்றில் மழைநீர் தேங்கி நிற்கும். மழை நீரிலிருந்து உற்பத்தியாகும் 'ஏடிஎஸ்' கொசு கடிக்கும் போது, டெங்கு காய்ச்சல் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பொதுமக்கள் மழைநீர் வீட்டுக்கு அருகில் தேங்காமல் செய்வது, குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிப்பது மற்றும் துாங்குமிடத்தில் கொசுவலை உபயோகப்படுத்துவது போன்ற முன்னேற்பாடுகளால் கொசுக்கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். தற்போது, பொது சுகாதாரத்துறையின் வாயிலாக கொசு மருந்து அடிப்பது, நீர் நிலைகளில், அபேட் மருந்து தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. காய்ச்சல் மற்றும் அதிக உடல் சோர்வு இருந்தால் சுய சிகிச்சை எடுத்துக்கொள்வதை தவிர்த்து மருத்துவரை பார்த்து, தேவைப்பட்டால் ரத்த பரிசோதனை செய்து முழுமையாக சிகிச்சை பெற வேண்டும். பாதுகாப்பு முறைகளை கடைப்பிடித்து டெங்கு நோயில் இருந்து அனைவரும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை