சன்சாத் கேல் மகோத்சவ் போட்டிகள் நிறைவு வீரர்களுடன் கலந்துரையாடுகிறர் பிரதமர் மோடி
கோவை: 'சன்சாத் கேல் மகோத்சவ்' போட்டிகள் நிறைவு விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக, விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடுகிறார். நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 'சன்சாத் கேல் மகோத்சவ்-2025' எனும் விளையாட்டு போட்டி, நீலகிரியில் நடந்து வருகிறது. மேட்டுப்பாளையம் ராம் பேட்மிண்டன் அகாடமியில் கடந்த நவ., 21ம் தேதி இறகுப்பந்து போட்டிகள் துவங்கிய நிலையில், 28ம் தேதி ஊட்டியில் கால்பந்து விளையாட்டுடன் போட்டிகள் நடந்து முடிந்தது. தொடர்ந்து, கடந்த 5ம் தேதி காரமடை கே.ஆர்., பப்ளிக் பள்ளி மற்றும் எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் பள்ளிகளில் கபடி, வாலிபால், கோ-கோ, சிலம்பம், யோகா உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இறுதி கட்டமாக கடந்த, 12ம் தேதி டர்ப் கிரிக்கெட் போட்டிகள் துவங்கி, மூன்று நாட்கள் நடந்தன. 3,500 பேர் பதிவு செய்த இந்த விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற உள்ளன. சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள், கேலோ இந்தியா அமைப்பு வாயிலாக தேசிய, சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ளும் வகையில், தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா, வரும், 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு, மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் நடக்கிறது. விழாவில் பிரதமர் மோடி, ஏதேனும் மூன்று அல்லது நான்கு விளையாட்டு வீரர்களுடன், காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாட உள்ளார். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிக்க உள்ளனர்.