உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 200 பேருக்கு பணி நியமன உத்தரவு

தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 200 பேருக்கு பணி நியமன உத்தரவு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்த, தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பொள்ளாச்சி சேவாலயம் அறக்கட்டளை மற்றும் பொள்ளாச்சி எச்.ஆர்., போரம் சார்பிலான வேலைவாய்ப்பு முகாம், என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்தது. சேவாலயம் அறக்கட்டளை தலைவர் மயில்சாமி தலைமை வகித்தார். முன்னதாக, செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார். முகாமை, நகராட்சி தலைவர் சியாமளா துவக்கி வைத்தார். என்.ஜி.எம்., கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன், முதன்மையர் முத்துக்குமார் ஆகியோர் பேசினர். எச்.ஆர்., போரம் மேலாளர் பொன்மலர், முகாம் குறித்து விளக்கிப் பேசினார். முகாமில், கோவை, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 796 பயனாளிகள் கலந்து கொண்டனர். தவிர, 60 க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனத்தார் பங்கேற்ற நிலையில், 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் லீலாகிருஷ்ணன், ஸ்ரீசுதர்சன், நாகமாணிக்கம், முஸ்தபா உள்ளிட்டோர் செய்திருந்தனர். சேவாலயம் துணைத் தலைவர் ரவீந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ